பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ‘அடல் டிங்கரிங் ஆய்வகம்’ தொடக்க விழா நடைபெற்றது.
இந்த ஆய்வகத்தை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளி மாணவிகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.
பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், அதற்கு தனியார் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி போன்றவற்றைக் கூட பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும என்றும் மாணவர்களும் ஆசிரியர்களை தங்களது மற்றொரு பெற்றோராக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.