11ஆவது உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதை சூர்யா, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெறுகின்றனர்.
மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது கடந்த பத்து வருடங்களாக வழங்கப்படுகிறது.
அந்தவகையில், 11ஆவது உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.
இதில், ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021ஆம் ஆண்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி ஜெய் பீம் படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
அதேபோல, ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021′ என்ற பிரிவில் எம்.எல்.ஏவும், திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.