பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லாத வகையில் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.
சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் திரு. @mkstalin தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது.
சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.