ஆப்கானிஸ்தானிலிருந்து தனது இராணுவத்தினரை அமெரிக்கா விலக்கி கொண்டதை தொடந்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் தற்காலிக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தவறு செய்தால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தாலிபான்கள் அமைப்பின் தலைவர் முல்லா நூடுதீன் தெரிவித்திருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தாலிபான்கள் கடந்த காலங்களில் நடுரோட்டில் வைத்து குற்றவாளிகளை, அவர்களின் சொந்த குடும்பத்தினரின் கைகளாலேயே சுட்டு கொல்ல வைக்கும் இந்தத் தண்டனைக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.
சாதாரண குற்றங்களுக்கே பெரும் தண்டனைகளை வழங்கி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தலிபான்கள், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், அங்கு திருட்டுச் செயல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் திருட்டில் ஈடுபடும் நபர்களுக்கு கைகள் வெட்டப்படும் என்றும், நெடுஞ்சாலைகளில் திருட்டுச் செயலில் ஈடுபட்டால் கால்கள் வெட்டப்படும் என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அமைப்பின் தலைவர் முல்லா நூடுதீன் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே இருபாலினக் கல்வியை மறுத்து, பெண்களின் அரசியல் தலையீட்டை மறுத்து, நாடாளுமன்றத்தில் பெண்கள் நல அமைப்பையே இல்லாமல் செய்துவிட்ட தலிபான்கள், தவறு செய்தால் கை கால்கள் வெட்டப்படும் என்ற தண்டனை குறித்து தெரிவித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.