12 மீனவர்களுக்கு ரூ.5 கோடியே 40 லட்சம் அபராதமும், 6 மாத சிறை தண்டனை. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது அவர் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதியும், இதனைத் தொடர்ந்து 23-ம் தேதி மேலும் 10 மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் மீன்பிடித்து, கரை திரும்பும் போது, இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கை கல்பிட்டி மீன் வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் மீதான வழக்கை விசாரித்த கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம் முதலில் படகில் சென்ற 12 மீனவர்களுக்கு ரூ.5 கோடியே 40 லட்சம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது. மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்கள் மீதான வழக்கில், இந்திய தூதரகம் தலையிட்டுள்ளதால், அதன் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரதிர்ச்சி தருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை. இப்போது இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
அன்றாட கூலி உழைப்பில் வாழ்வாதாரம் பெற்றுள்ள மீனவர்கள் தலா ரூ.42 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது கற்பனைக்கு எட்டாத தாக்குதலாகும். தமிழக மீனவர்களை ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும். மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும்.
இலங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, தூதரகம் மூலமாக மத்திய அரசு சட்டரீதியான உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.