தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியூர் சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை (special buses) இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நாளை (ஜூலை 29) மொகரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 300 பேருந்துகளும் என மொத்தம் 600 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் மொகரம் பண்டிகையை ஒட்டி 4 நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் (special buses) இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், கோவை மண்டல போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொகரம் மற்றும் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகப்படியாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஆனாலும், பயணிகளின் வருகை அதிகமாக இருப்பின், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கவனிக்க போக்குவரத்து அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.