இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும்போது கவுண்ட்டவுன் அறிவிப்பு செய்து வந்த பெண் விஞ்ஞானி வளர்மதி, மாரடைப்பால் சென்னையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் டாக்டர். பி வி வெங்கிடகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு, ஆனாலும், ஒரு சிலரின் குரல்கள் மக்கள் மனதில் நிரந்தரமாகப் பதிந்திருக்கும். அது பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூட இந்த பட்டியலில் உள்ளனர்.அந்த வகையில் ராக்கெட் ஏவப்படும் போது எண்களை ஒலிக்கும் குரல் தான்.
இஸ்ரோவின் ஏவுகணைக்கு முந்தைய கவுண்ட்டவுன் அறிவிப்புகளுக்குப் பின்னால் குரல் கொடுத்து வந்தவர் சென்னையை சேர்ந்த வளர்மதி.இவர் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ரேஞ்ச் ஆபரேஷன்ஸ் ப்ரோகிராம் அலுவலகத்தில் கடந்த ஆறு வருடங்களாக, அனைத்து ஏவுகணைகளுக்கான கவுண்ட்டவுன் அறிவிப்புகளையும் அவர் செய்து வந்தார்.
ஐம்பது வயதாகும் அவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை காலமானார்.கடந்த ஜூலை 30ஆம் தேதி, 7 சிங்கப்பூர் செயற்கைக் கோள்களை ஏற்றிக்கொண்டு PSLV-C56 ராக்கெட் ஏவப்பட்டபோது கடைசியாக அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
கவுண்ட்டவுன் அறிவிப்பு செய்து வந்த பெண் விஞ்ஞானி வளர்மதி,மறைவிற்க்கு இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் டாக்டர். பி வி வெங்கிடகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது:
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் எதிர்கால பயணங்களின் கவுண்டவுன்களுக்கு வளர்மதி மேடத்தின் குரல் இருக்காது. சந்திரயான் 3 அவரது இறுதி கவுண்டவுன் அறிவிப்பு மற்றும் அவரது எதிர்பாராத மரணம் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.