மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் இருந்து வந்த நிர்மலா தேவி, கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தை கூறி உயர் கல்வித்துறையில் உள்ள முக்கிய நபர்களுக்கு பாலியல் ரீதியாக மாணவிகளைப் பயன்படுத்த முயன்ற ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், 2018 ஏப்ரலில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்பு, மூவர் மீதும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ”மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிர்மாலா தேவி..”நாளை வெளியாகும் தண்டனை அறிவிப்பு!
100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இருதரப்பு வாதங்கள் மற்றும் விசாரணைகளும் நிறைவு பெற்ற நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.
மேலும், பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் குற்றவாளி இல்லை என்று அவர்களை விடுவிடுத்துள்ளனர்.இதனையடுத்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில்,நிர்மலா தேவிக்கு சிறைத்தண்டனை உறுதியான நிலையில், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
- நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை :
- 370 (1) பிரிவில் 7ஆண்டு கடுங்காவல், ரூ.5,000 அபராதம்
- 370(3) பிரிவில் 10 ஆண்டு கடுங்காவல், ரூ.25,000 அபராதம்
- 5(1)a பிரிவில் 5 ஆண்டுகள் சிறை, ரூ.2,000 அபராதம்
- 9 ITP பிரிவில் 10 ஆண்டு சிறை, ரூ. 10,000 அபராதம்
- 67 ITP பிரிவில் 3 ஆண்டு கடுங்காவல், ரூ.2 லட்சம் அபராதம்
- தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டதால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை; ரூ.2,42,000 அபராதமும் விதித்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள்