வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை அடுத்த 5 நாட்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்த நிலையில் தற்போது தமிழகத்தின் பல நகரங்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதை தொடர்ந்து தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதே போல் புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..