தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும் குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (26.09.2023) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:-
சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், அடிக்கடி குற்றம் நிகழும் இடங்களின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும் அறிவியல்பூர்வமாக காவல் துறை செயல்பட வேண்டும்.
அடுத்து, நான் மிக முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது, பாலியல் ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இத்தகைய குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்.
போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வரும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தனி அக்கறையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு அவர்களுடைய குழந்தையின் பெயர், அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.
போக்சோ சட்டம் குறித்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சென்று குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பற்றியும், அதேபோல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள்பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த அவசரகால உதவி எண்கள் / வாட்ஸ்-அப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டதால் கள்ளச்சாராய விற்பனை குறைந்துள்ளது என்று அறிகிறேன். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மலைப்பகுதிகள் மற்றும் எல்லை மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதைபொருட்கள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சனை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரை காவல் ஆளிநர்கள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் அவர்களின் பணியில் ஈடுபட்டு, சரியான நுண்ணறிவு தகவல்களைப் பெற்று, எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
காவல் துறை சிறப்பாகச் செயல்பட, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதி பெற்றுத் தருவதிலும் பெரும் கவனம் செலுத்த வேண்டும்.
இறுதியாக, நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக, மேலும் வளர்ச்சி பெற, குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைத்திடவும், தடுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுனென்று உங்கள் அனைவரையும் கேட்டு என் உரையை நிறைவு செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்