R. Sambandhan passed away : இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான இரா.சம்பந்தன் இன்று (ஜூலை 01) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.
அவரது மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன்.
இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார், செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார்.
இதையும் படிங்க : July 01 Gold Rate : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!!
இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் பேணி வந்தார். தலைவர் கலைஞர் அவர்களின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார்.
2015-ஆம் ஆண்டில் சம்பந்தன் அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2016-ஆம் ஆண்டு 13-ஆவது முறையாகத் தலைவர் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பந்தன் அவர்களும், “இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்” என வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் எக்ஸ் வளைத்தப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர் (R. Sambandhan passed away).