சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சின்னத்திரை சீரியலான மெட்டி ஒலி தொடரை இயக்கிய திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.
ஸ்ருதி சண்முகப்பிரியா கோவையை சேர்ந்தவர். இவருக்கு குடும்பத்தினர் ஏற்பாட்டின் மூலம் கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
உடற்பயிற்சி செய்வதில் அரவிந்த் சேகர் மிகவும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், அரவிந்த் சேகர் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இவர்களின் திருமணத்திற்கு பிறகு கடந்த ஒரு வருடமாக வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் சுருதி சண்முகப்பிரியா. இந்நிலையில் தான் இவரது வாழ்க்கையில் இப்படி ஒரு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
இன்று அரவிந்த் சேகர் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்படதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் அரவிந்த் சேகரின் மறைவு தற்போது சின்னத்திரை உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.