கள்ளக்குறிச்சியில் தாயே தனது 7 வயது மகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொலைக்கான காரணம் கேட்டு போலீசாரே அதிர்ந்து போயுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ்-சத்யா தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் அதிசயா என்ற மகள் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் அதிசயா மாயமான நிலையில், அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த செய்தி பரவியதும், சிறுமியின் தாய் சத்யா தலைமறைவாகி, அதன் பின்னர் பூட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் சரணடைந்தார். அதன் பிறகான விசாரணையில், கணவருக்கு தெரியாமல் பலரிடம் கடன் பெற்ற சத்யா, கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தது தெரியவந்திருக்கிறது.
இதனால் பணம் கொடுத்தவர்கள் தினமும் வீடு தேடி வந்து கொடுத்த பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். இதனால், கடன் விவகாரம் கணவருக்கு தெரிந்து விடுமோ என சத்யா பயத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், குழந்தையை கொன்றுவிட்டால், அனுதாபத்தில் சிறிது காலத்திற்கு யாரும் கடன் கேட்டு நெருக்கடி தர மாட்டார்கள் என கொடூரமாக யோசித்து தன் மகளை அவர் கொன்றது தெரியவந்திருக்கிறது.
சத்யாவின் வாக்குமூலம் கேட்டு அதிர்ந்து போன போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் கொடுத்தவர்கள் சிறிது காலத்திற்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதற்காக, பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.