கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கொட்டித் தீர்த்தது.
அப்போது நள்ளிரவு 2 மற்றும் 4.30 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி அப்பகுதி மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். தற்போதுவரை முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இன்று 4வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலச்சரிவில் மக்கள் பலரும் நீரால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், சிலர் வனப் பகுதிக்குள் சென்று மரங்களைப் பிடித்துக் கொண்டும், பாதுகாப்பான இடங்களுக்கும் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.
அந்தவகையில், இந்த கோர நிலச்சரிவில் இருந்து தனது பிள்ளையுடன் மீண்ட ஒரு பெண்ணுக்கு யானைகள் பாதுகாப்பாக நின்று, கண்ணீர் சிந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : வயநாடு நிலச்சரிவு : அறிக்கை தாக்கல் செய்திடுக.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!!
இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது..
“நள்ளிரவு 1 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்ட போது நான் என் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு ஒரு மரத்திற்கு அடியில் சென்றுவிட்டேன். அப்போது கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது.
மேலும், எங்களின் அருகில் மூன்று காட்டு யானைகளும் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு யானை காதுகளை ஆட்டியபடி எங்களைப் பார்த்த படி நின்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த யானையிடம் நான் பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு நாங்கள் இங்கு வந்து நிற்கிறோம். யாராவது இங்கு வந்து எங்களை வந்து காப்பாற்றும் வரை நீ எங்களை ஒன்றும் செய்துவிடாதே எனக் கூறி கதறினேன்.
பின்னர் காலை 6 மணியளவில் காபி தோட்டத்தில் இருந்து எங்களை மீட்க வந்தனர். அவர்கள் நாங்கள் அங்கு இருப்பதை பார்த்து எங்களை மீட்டு செல்லும் வரை அந்த யானை எந்த உணவையும் சாப்பிடாமல் எங்கள் அருகிலேயே நின்று அழுதுகொண்டே இருந்தது என்று கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.