பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது.
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராடிய நிலையில், அவற்றை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மேலும் தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, புதிய வகை வைரசால் மீண்டும் கொரோனா அச்சம் என பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை கூடியது.
இன்றைய முதல் நாள் கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதாவை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே , 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது.