சென்னை மற்றும் மதுரையில் இயங்கும் உயர்நீதிமன்றங்களில் இன்றிலிருந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் பாதிக்கப்படுவர்கள் மற்றும் உயிரிழப்பு அதிகமாக இருந்ததால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை அடுத்து கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 306 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 122 பேருக்கும், கோவையில் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம், தனிமனித இடையே இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று முதல் சென்னை மற்றும் மதுரையில் இயங்கும் உயர்நீதிமன்றங்களுக்கு வருவோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா மூன்று அலைகளை நாம் கடந்து விட்ட நிலையில் பாதுகாப்பு கருதி இன்று முதல் வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், வழக்குகளில் தொடர்பு இல்லாதவர்கள் உயர் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.