ஈரோடு மாவட்டத்தில் மெக்கானிக் (mechanic) ஒருவர், தனது காதலி வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்து காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் வசித்து வரும் நஞ்சுண்டப்பன் என்பவரின் மகன் சந்தோஷ். 32 வயதாகும் இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
மேலும், பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணிபுரிந்து வந்த நிலையில், அந்தப் பெண்ணும், சந்தோஷும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்தோஷ் (mechanic) காதலித்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் தனது காதலி மீது இருந்த ஆத்திரத்தால் நேற்று பகல் 11 மணியளவில் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தனது நண்பரான 38 வயதாகும் காப்பர் காந்தன் என்பவரை அழைத்துக் கொண்டு காதலி வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்று தனது காதலியை வெளியே வரும்படி கூறியுள்ளார்.
இந்நிலையில், அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணிற்கும் சந்தோஷம் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கண், தோள்பட்டை, விரல்கள், மணிக்கட்டு என உடலின் பல இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால், வலியால் அலறி துடித்த அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்த பொழுது அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து, அவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அந்த பெண்ணிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷயும் அவரது கூட்டாளி காப்பர் காந்தனையும் கைது செய்துள்ளனர்.