ITamilTv

சந்திரயான் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படம் – வெளியிட்டது இஸ்ரோ!

Spread the love

சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த சந்திரயான்-3, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் கடைசி முறையாக உயரம் குறைக்கப்பட்ட நிலையில், திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இன்றைய தினம் விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த 9ம் தேதி, 4,400 கிலோமீட்டர் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

லேண்டரில் உள்ள கிடைமட்ட வேக கேமரா மூலம் எடுக்கப்பட்ட, இந்த படமானது நிலவின் பள்ளத்தாக்குகள் தெளிவாக தெரியும் வகையில் எடுக்கபட்டுள்ளது. நிலை, வேகம் போன்றவற்றை கண்டறியும் கேமரா மூலம் புகைப்படம் எடுத்திருப்பதன் மூலம் லேண்டரில் உள்ள கேமரா சோதனையும் நடைபெற்று முடிந்துள்ளது.

ஏற்கெனவே இஸ்ரோ வெளியிட்ட பூமியின் படம் விண்கலம் ஏவபட்ட ஜூன் 14ஆம் தேதி விக்ரம் லேண்டரின் இமேஜர் கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது. நிலநிறத்தில் இருக்கும் பூமியின் தோற்றம் அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறது.


Spread the love
Exit mobile version