உத்தர பிரதேசத்தில் காவலர் ஒருவர் லஞ்சமாக 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்ட நிலையில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள செய்தி வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சவுரிக் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ராம் கிரிபால் சிங்.
இதையும் படிங்க : மோகன்லால் குறித்து அவதூறு.. கேரள யூ-டியூபர் கைது!!
இவர் அண்மையில் ஒரு வழக்கை முடித்து வைப்பதற்காக விவசாயி ஒருவரிடம் 5 கிலோ உருளைக்கிழங்கு லஞ்சமாக கேட்டு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த ஆடியோவில், காவலர் ராம் கிரிபால் சிங் விவசாயியிடம் 5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அந்த விவசாயி தன்னால் 2 கிலோ உருளைக்கிழங்கு தான் தர முடியும் என்று கூறுகிறார்.
அதன் பின்னர் இறுதியாக 3 கிலோ உருளைக்கிழங்கை பெற்றுக்கொள்ள ராம் கிரிபால் சிங் சம்மதம் தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான ஆடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ராம் கிரிபால் சிங்கை சஸ்பெண்டு செய்து கன்னோஜ் மாவட்ட எஸ்.பி. அமித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.