கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டதில் (kalaignar100) மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசத் தொடங்கிய போது பள்ளிவாசலில் தொழுகை பாடல் ஒலித்ததால் முதலமைச்சர் பேச்சை நிறுத்தும்படி கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவரும் தமிழ் நாட்டு முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா( kalaignar100) நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில்ஸ் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில், ஆ. இராசா, எம்.பி., கனிமொழி கருணாநிதி, எம்.பி., திருச்சி சிவா, எம்.பி., தயாநிதி மாறன், எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்ட தோழமை கட்சிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தல் யார் ஆட்சி அமைக்கப்படக்கூடாது என்பதற்கான தேர்தல் என்றும், வரும் 23ஆம் தேதி இதற்காக பீகாரில் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். மேலும் தேவையற்ற வேறுபாடுகளை களைந்து எதிர்கட்சிகள் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசத் தொடங்கியதும் பள்ளிவாசலில் தொழுகை பாடல் ஒலித்தது. இதனை பொருட்படுத்தாமல் அவர் விழா மேடையில் பேசி வந்தார். இதை கவனித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் பேச்சை நிறுத்தும்படி கூறி அனுப்பினார்.
உடனே பேச்சை நிறுத்திய அவர், தொழுகை ஓசை நின்ற பிறகு உரையை தொடர்ந்தார்.தற்பொழுது இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிக அளவில் பகிரபட்டு வருகிறது.