ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
“ஆண்டியாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும், மனிதனுக்கு மன அமைதிதான் முக்கியம்.அதனை வழங்கவே கோயில் கொண்டுள்ளார் ஈசன். அவர்தான் ஐராவதேஸ்வரர். மேலும் இத்தலத்து ஈசனை வழிபட்டால், வீண்பழி வராது.தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். புண்ணியம் பெருகும். குருவருள் கிட்டும். வேண்டுவன பலித்து வாழ்வில் சகல வளமும் பெறுவர் ” – என்று பக்தர்களால் தரிசிக்கப்படும் திருத்தலம் ,திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருக்கொட்டாரம் கிராமத்தில் அமைந்துள்ளது.
பச்சை பசேலென நெற்வயல்களும், உயர்ந்த தென்னை மரங்களும், சிற்றாறுகளும் சூழ்ந்த,அமைதி தவழுமிடத்தில் ஸ்ரீ வண்டுமர் பூங்குழலி சமேத ஸ்ரீ ஐராவதேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இன்றும் தேனீ உருவில் சுபக மகரிஷி, ஐராவதேஸ்வரரை தினமும் வழிபடுவதாக நம்பிக்கை பெற்ற இத்தலத்திற்கு, உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ்த் தாய் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.
கோடு என்றால் கரை என்று பொருள். வாஞ்சியாற்றின் கரையில் இத்தலம் அமைந்திருப்பதால் ‘கோட்டாறு ‘ எனப்பட்டது. தற்போது மருவி ‘திருக்கொட்டாரம்’ என்றழைக்கப்படுகிறது. அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு, அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற,இத்தலத்தில் தேவாரப் பதிகம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலைக் கட்டுவித்தவன் சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க சோழராஜன் ஆவான்.
இங்கு ஐராவதேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர்,தட்சிணாமூர்த்தி, விஷ்ணு,பிரம்மா,துர்க்கை,சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், சம்பந்தர், அப்பர், நாகர், சுந்தரர், பரவை நாச்சியார், கைலாசநாதர், அகஸ்தீஸ்வரர், சுபகமகரிஷி, பைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
“ஒரு சமயம் தேவலோகத்தில் இந்திரன் தனது வாகனமான வெள்ளை நிற ஐராவத யானைமீது, பவனி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவர் சிவலிங்க பூஜையை முடித்துவிட்டு வந்தபோது,எதிரில் ஐராவதத்தில் வந்து கொண்டிருந்த இந்திரனிடம், இறைவனுக்கு சாற்றிய தாமரை மலரைக் கொடுத்தார். செருக்குடன் அமர்ந்து வந்த இந்திரன், அந்த பிரசாதத்தின் பெருமை அறியாமல், ஒரு கையால் தாமரை மலரை பெற்று, அதனை தன் யானை மீது வைத்தான். ஐராவத யானை அம்மலரை தம் துதிக்கையால் எடுத்து தூக்கி வீசி காலால் மிதித்துவிட்டது.
இதனைக் கண்டு கோபமற்ற துர்வாச முனிவர், தேவேந்திரனையும் ஐராவதத்தையும் சபித்தார். அதன்படி ஐராவதம் தன் பெருமையை இழந்து, பூலோகத்தில் கருமை நிறம் பெற்று காட்டு யானை ஆனது. 100 தலங்களை சுற்றி பரமேஸ்வரனை வழிபட்டு, இறுதியில் மதுரையில் இறைவன் அருளால்,இழந்த பெருமைகளையும், வெண்ணிற வடிவத்தையும் பெற்று, மறுபடியும் இந்திரலோகம் சென்றதாக திருவிளையாடற்புராணம் எடுத்துரைக்கின்றது.
ஐராவதம் காட்டு யானையாக இருந்து வழிபட்ட பல தலங்களில் இத்திருத்தலமும் ஒன்று. ஐராவதம் சாப விமோசனம் பெறுவதற்காக, கோட்டாற்றில் தினமும் நீராடி, துதிக்கையால் நீரும், மலர்களும் கொண்டு வந்து ஈசனை வழிபட்டு வந்தது. ஒருநாள் நீர்நிலைகளில் நீர் குறைந்து வற்றிவிட்டன. சிவ பூஜை செய்வதற்கு நீரும்,மலரும் இல்லாது போயின.
எக்காரணத்தாலும் சிவபூஜை தடைபடலாகாது என்று எண்ணிய தேவலோகயானை ஐராவதம், தன் தந்தங்களால் கார்மேகத்தை குத்திக் கிழித்தது. மேகம் உடனே வெள்ளமென நீர்ப்பொழிய,அந்த நீரைக கொண்டும், வானத்திலிருந்து தன் துதிக்கையால் பறித்த பாரிஜாத மலரை கொண்டும், ஐராவதம் சிவ பூஜையை சிறப்பாகச் செய்தது என்கிறது” தலவரலாறு. இதனை திருஞானசம்பந்தரும் தமது பாடலில் அருளியுள்ளார்.
மேலும் திருஞானசம்பந்தரே இத்தலத்தில் ஈசனை, மௌன குருவாக தொழுது பதிகம் பாடியுள்ளதால், குருவருளை பெறுவதற்கு ஆலங்குடி, மயிலாடுதுறை, தென்குடித்திட்டை போல இதுவும் சிறப்பான தலமாகும்.
தேனீ,தேன்கூடு,தேன் – இவைகள் இத்தலத்து ஈசனோடு ஐக்கியமாகியுள்ள ஆச்சர்யமூட்டும் கதையைக் கேட்போம்.
“சுபக மகரிஷி என்பவர் இத்தலத்துப் பெருமானை நாள்தோறும் அர்த்தசாம பூஜை வேளையில் தரிசித்து வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு தாமதமானதால், கோயில் கதவு மூடப்பட்டுவிட்டது. அதைக் கண்ட சுபக மகரிஷி, வழிபாடு தடைப்படக்கூடாது என்பதற்காக, தேனீ வடிவம் கொண்டு ,ஜன்னல் வழியே உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அன்று முதல் அவர் அங்கேயே தங்கி ,நித்தமும் ஐராவதேஸ்வரரை வழிபடுவதாய் ஐதிகம்.
அக்காலம் தொடங்கி,இன்றுவரை அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழைமையான தேனடை உள்ளது. இறைவன் சந்ததியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம்.தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்து வணங்கி வருகின்றனர். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதும் வழக்கமாய் உள்ளது.
‘சுவாமிக்கு நித்திய பூஜையில் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அது போல் பக்தர்களும் சுவாமிக்கு தேன் சமர்ப்பித்தே வேண்டுதல்கள் செய்கிறார்கள். மேற்கு நோக்கி வீற்றிருக்கும் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்ய லட்சுமிகடாட்சம் பெருகும்’ என்கிறார்கள்.
மீண்டும் ஓர் அற்புதமான ஆலயத்தில் சந்திக்கும் வரை, உங்களிடம் இருந்து விடை பெறுவது
ஐ தமிழ்