நாங்குநேரி சின்னதுரை தனக்கு நேர்ந்த இழிவுகளையும் தாக்குதல்களையும் அதனால் ஏற்பட்டுள்ள ஆறாத வடுக்களையும் தீராத வலிகளையும் தனது கல்வி வேட்கையென்னும் பெருநெருப்பால் பொசுக்கியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் சின்னதுரையும், அவரது தங்கையும் வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் வீட்டில் படித்துக்கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டப்பட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவரை தாக்கிய அதே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 படித்த மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ”நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி…” மாணவர் சின்னதுரைக்கு உறுதியளித்த ஸ்டாலின்!
இந்தநிலையில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய சக மாணவர்களால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை 469 மதிப்பெண்களை எடுத்திருந்தார்.
தமிழ் – 71
ஆங்கிலம் – 93
பொருளாதாரம் – 42
வணிகவியல் – 84
கணக்குப்பதிவியல் – 85
கணிப்பொறி பயன்பாடு – 94
மொத்தம்- 469
இந்தநிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து சின்னதுரை வாழ்த்து பெற்றனர்.இந்த நிலையில் நாங்குநேரி மாணவர் சின்னதுரை விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள நாங்குநேரி சின்னதுரை தனக்கு நேர்ந்த இழிவுகளையும் தாக்குதல்களையும் அதனால் ஏற்பட்டுள்ள ஆறாத வடுக்களையும் தீராத வலிகளையும் தனது கல்வி வேட்கையென்னும் பெருநெருப்பால் பொசுக்கியுள்ளான். இவனுக்குள் அம்பேத்கர் என்னும் தீ கங்கு கனன்று கொண்டுள்ளது.

அதன் வெளிப்பாடுதான் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவன் பெற்றுள்ள மதிப்பெண்கள்.தொலைபேசியில் அவனைத் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். “சென்னையில் தங்கிப் படிக்கலாம் வா ” என்றேன். ” நெல்லை சேவியர் கல்லூரியில் படிக்க விரும்புகிறேன் அண்ணா” என்று உடனே விடையிறுத்தான். அவனது குரலில் தெளிவும் உறுதியும் தெறித்தது.
அவனுடைய தாயாரிடமும் எனது மகிழ்வைப் பகிர்ந்துகொண்டேன். சாதிவெறித் தாக்குதலிலிருந்து அவனைக் காப்பாற்றிய அவனுடைய தங்கை சந்திராவிடம் நான் நலம் விசாரித்ததாகச் சொல் என்று கூறினேன்.
பி.காம் படித்து பின்னர் ஆடிட்டராக வர வேண்டும் என்கிற அவனது கனவு நனவாகட்டும்.தம்பி சின்னதுரை, தனது இந்த சாதனையின் மூலம் சாதியத்தைத் திருப்பித் தாக்கியுள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்.