மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறைகள் குறித்து நேரில் கண்டறிவதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த இந்தியா கூட்டணியின் 21எம்.பிக்கள் கொண்ட குழு ஜூலை 29 ஆம் தேதி அன்று டெல்லியிலிருந்து மணிப்பூரின் தலைநகர் இம்ஃபாலுக்குச் சென்றது .அதில் விசிக சார்பில்2 எம்.பிக்களும் அக்குழுவில் இடம் பெற்று மணிப்பூருக்குச் சென்றனர்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட பிறகு தனது அனுபவத்தை திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்மணிப்பூரில் பிஷ்னுபூர் மாவட்டம், மோரேங் என்னும் கிராமத்தில் அமைக்கப்படுள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருக்கும் மெய்ட்டீ சமூக மக்களைச் சந்தித்தோம்.
எங்களைப் பார்த்துமே ஒரு இளம்பெண் ஆவேசமாக ஆங்கிலத்தில் கடும் கோபமாக பேசினார். முதலில் குக்கிகளைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் எங்களைப் பார்க்க வருவது ஏன் என சற்றுக் கடுமையாக குரலை உயர்த்தினார். எமது மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை ஆற்றுப்படுத்தினர்.
பின்னர் அவர் மெய்ட்டீ சமூகத்தைச் சார்ந்த மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றார். மாநில அரசும் இந்திய ஒன்றிய கூட்டரசும் தங்களுக்கு கடந்த 80 நாட்களாக நிவாரணப் பணிகளைக் கூட போதிய அளவில் செய்யவில்லை என்று வருந்தினார். முதல்வர் வந்து தங்களைப் பார்க்கவே இல்லை என்றும் வேதனைப்பட்டார்.
குக்கி பழங்குடியினர் வாழும் மலைப்பகுதிகளில் மியான்மர் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகவும்; அவர்களே பாப்பி என்னும் போதைப் பொருள் தயாரிக்கும் செடிகளை 15000 ஏக்கருக்கும் மேலான நிலங்களில் பயிரிடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மெய்ட்டீ சமூகப் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,மருத்துவப் பரிசோதனைகள் செய்தால் உண்மைகள் வெளிவருமென்றும் கூறினார். குக்கி இனத்தைச் சார்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டது மட்டுமே சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளிவந்தது.
அதைக் கண்டதும் பிரதமர் மோடி கண்டிக்கிறார்; ஆனால் நாங்கள் பாதிக்கப்பட்டதற்கு அவர் என்ன சொல்லப்போகிறார் என்றும் பிரதமரை அந்த இளம்பெண் கடிந்து கொண்டார். சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே கலங்கி அழுதார். உடன் நின்ற பெண்களும் அழுதனர். அக்காட்சி் நெஞ்சைக் கனக்கச் செய்தது என தெரிவித்துள்ளார்.