பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பண்டிகை நாட்கள், மற்றும் கோவில் திருவிழா காலங்களில் பயணிகளில் வசத்திக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் மாா்கழி மாதப் பெளா்ணமி இன்று (டிச.26) அதிகாலை 5.56 மணிக்குத் தொடங்கி நாளை (டிச.27) காலை 6.07 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பயணிகள் www.tnstc.in மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் செயலியில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.