ஐ தமிழ் தாய் நேயர்களுக்கு வணக்கம்
திருவண்ணாமலை.. இந்த ஊருக்கு நிறைய பெருமைகள் இருக்கிறது. சித்தர்கள் வாழும் இடமாக உள்ளது. சிவபெருமான் விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் அடி, முடி தெரியா காட்சி அளித்ததும் இங்கு தான். இங்கு மலையே சிவபெருமானாக காட்சி அளிப்பதால் பக்தர்கள் இம்மலையைச்சுற்றி கிரிவலம் வருகின்றனர்.
மேலும், பல சித்தர்கள் உருவமாகவும் அரூபமாகவும் இங்கு கிரிவலம் வந்து கொண்டிருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த மலையை சுற்றி பல ஆசிரமங்களும், மடங்களும், அஷ்ட லிங்கங்களும் இருக்கிறது.
கைலை சென்றால் தான் மோட்சம், அண்ணாமலையை நினைத்தாலே மோட்சம் என்பதற்கேற்ப அண்ணாமலையை நினைத்த மாத்திரத்தில் முக்தி தரும் ஸ்தலம் என்பதால் இங்கு வர இயலாத ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரை மனதளவில் நினைத்து வேண்டி வழிபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் பல கோவில்கள், சித்தர்கள், சித்த புருஷர்களின் ஆசிரமங்கள், ஜீவ சமாதிகள், குளங்கள் போன்றவை இருப்பதனால் இம்மலையை ஒருமுறை கிரிவலம் வந்தால் அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு பக்தர்கள் மட்டுமல்லாமல் தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் கூட இன்றும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவதாக ஐதீகம்.
இப்படி பட்ட திருவணாமலைக்கு நவதுவாரபதி என்ற பெயரும் உண்டு.
அதாவது சிவபெருமான் 9 வாயில்களுக்கு அரசனாக இருக்கிறார் என்று பொருள். அந்த ஒன்பது கோபுரங்கள் என்னவென்றால், 1. ராஜ கோபுரம், 2. பேய் கோபுரம், 3.திருமஞ்சன கோபுரம், 4. வல்லாள மகாராஜா கோபுரம், 5. கிளி கோபுரம், 6. தெற்கு கட்டை கோபுரம், 7. மேற்கு கட்டை கோபுரம், 8. அம்மணியம்மாள் கோபுரம், 9.வடக்கு கட்டை கோபுரம் ஆகும்.
இந்த ஒவ்வொரு கோபுரத்தின் பின்னணியிலும் சுவையான வரலாறும் பொதிந்திருக்கின்றன.
இது மட்டுமல்ல இவ்வாலயத்தின் உள்ளே 6 பிராகாரங்கள் இருக்கின்றன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் பால ரமணர் தவம் செய்த இடம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமையப்பெற்றுள்ளது.
உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. இந்த மலையின் உயரம் சுமார் 2665 அடி. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில்மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
எனவே, நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையை நம் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்துவிட வேண்டும்.