Thiruveezhimilai Temple : “பணம் நிறைய கிடைக்கனும். நகைகள் வீட்டில் குவியனும். உரிய காலத்தில் பிள்ளைங்களுக்கு திருமணங்கள் நடக்கனும்” என்ற பிரார்த்தனைகள் பலருக்கும் இருக்கும் தானே!
அத்தகைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமானால்…. நீங்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய பிரசித்திபெற்ற ஆலயம் ஒன்று இருக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் அருகே திருவீழிமிழலையில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை சமேத ஸ்ரீ வீதிநாதசுவாமி கோயில்தான் அது !
சோழ மன்னர்களின் காலம்தொட்டு இன்றுவரை புண்ணிய பூமியாய் விளங்கி வரும் திருவீழிமிழலை திருத்தலத்திற்கு உங்களை அழைத்து செல்வதில் ஐ தமிழ் தாய் பெருமிதம் கொள்கிறது.
ஊரின் நடுவே சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கிறது வீதிநாதர் திருக்கோயில். ராஜகோபுர வாசலை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி, திருமூலநாதர் சந்நதி உள்ளன. பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் படிக்காசு விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
பிரகாரத்தின் கிழக்கில் அமைந்துள்ள பலிபீடத்தில் திருஞானசம்பந்தருக்கும், மேற்கில் அமைந்துள்ள பலிபீடத்தில் திருநாவுக்கரசரருக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் இத்தல ஈசன் படிக்காசு வைத்தருளியதாக பெரிய புராணம் சொல்கிறது. இதன் தென்புறமுள்ள பீடத்தில் சுந்தரருக்கு திருவாபரணம் அருளியதாக தலவரலாறு கூறுகிறது.
இந்த மாட கோயிலில் ஏறுவதற்கு முதலிலுள்ள 12 படிகளும் 12 மாதங்களையும், அடுத்துள்ள 7 படிகள் வார நாட்களையும், அதற்கு அடுத்தாற்போல் 6 படிகள் ருதுக்களையும் குறிப்பதாகும். வடக்குப் புற திருச்சுற்றில் மண்டபத்தில் ஏறுவதற்குள்ள 9 படிகள் நவக்கிரகங்களை குறிப்பதாக கூறுகின்றனர்.
இத்தகைய அமைப்பு வேறு எந்தக் கோயிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தல விருட்சமான பலாமரத்தில் வேரிலும், கிளைகளிலும் மட்டுமல்லாமல் கிளைக்காம்பிலும் பலாப்பழங்கள் ஆண்டு முழுவதும் காய்ப்பது இக்கோயிலுக்கே உரிய சிறப்பாகும்.
மாடக்கோயிலை தாங்கி நிற்பதுபோல் பாதாளநந்தி அமைந்திருப்பது கட்டிட கலைநயத்தின் உச்சம். எல்லாவற்றையும் விட ஸ்ரீ வீதிநாதரின் கருவறை பின்புறச் சுவரில் ஒரு துவாரம் உள்ளது. அத்துவாரம் வழியாக மாலை வேளையில் கிளிகள் சென்று வீழிநாதரை வழிபடுவது இன்றும் நடந்துவரும் அற்புத நிகழ்வாகும்…
இதையும் படிங்க : இந்த கோவிலுக்கு போனா 1000 சிவன் கோயிலுக்கு போனதுக்கு சமம்!!
இத்திருத்தலத்தில் தவம் செய்து வாழ்ந்து வந்த காத்தியாயன முனிவரின் மகளாக அவதரித்தவர் காத்தியாயினி. அவரை சிவபெருமான் நந்திப் பெருமானை சாட்சியாக வைத்து திருமணம் புரிந்து கொண்டு திருமணக் கோலத்தில் இத்தலத்தில் அருள்பாளிக்கின்றார்.
எனவே இத்திருக்கோயிலில் ஸ்ரீ காத்தியாயனி சமேத ஸ்ரீ மாப்பிள்ளை சுவாமியை முறைப்படித் தரிசிப்போர் வேண்டுகின்ற திருமண பிராப்தம் நன்முறையில் விரைவில் அமையும் என்பது கண்கூடு.
அர்த்தமண்டபத்தில் முன் அமைந்துள்ள மகா மண்டபம் திருமண மண்டபம் போல் காட்சியளிப்பதும் , அருகில் பந்தல்கால் இருப்பதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு.
திருமணம் வரம் வேண்டுவோர் மணக்கோலத்தில் காட்சிதரும் சுவாமி அம்பாளை வணங்கி, மாலையிட்டு சிவாச்சியார் சொல்லித் தருகின்ற வேத மந்திரத்தை சொல்லிக் கொண்டே மூன்று முறை பந்தல்காலை சுற்றி வரவேண்டும்.
அதன்பின் தொடர்ந்து 45 நாட்கள் வீட்டிலேயே மனமுருக வேண்டினால் திருமணம் நடந்தேறிவிடும். திருமணத் தடை அகல திருமணஞ்சேரி கோயிலுக்குச் செல்வதுபோலவே இத்தலத்திற்கும் தினமும் நூற்றுக்கணக்கானோர் தரிசிக்க வருகின்றனர்.
சுவேதகேது என்னும் மன்னன் இத்தலத்து இறைவனை வழிபட்டு எமபயம் நீங்கி, என்றும் சிரஞ்சீவியாய் வரம் பெற்றமையால் இத்திருக்கோயிலில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை நடத்தி இறைவனை வழிபட்டு நீண்ட ஆயுள் பெறுகின்றனர். எம வாதனை வாராது காத்தருளப் பெறுகின்றார்கள்.
இக்கோயிலில் சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம் அட்சய திருதியை நாளன்று சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர், பரவைநாச்சியாரை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு, ஈசனிடம் வேண்டி
திருவாபரணம் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
எனவேதான் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளன்று தங்க நகைகள் வாங்க நகைக்கடைகளில் மக்கள் குவிகிறார்கள்.
இதற்கு காரணம் இத்தலம்தான் (Thiruveezhimilai Temple).. அதுபோல் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இவ்வூரின் பஞ்சம் தீர்ப்பதற்காக இத்தலத்து இறைவனிடம் படிக காசுகள் என்னும் பொற்காசுகள் பெற்று பஞ்சம் போக்கினர் என்பது சேக்கிழார் காட்டும் வரலாற்று உண்மையாகும்.
எனவே வாழ்வில் செல்வ வளம் வேண்டுவோர் இத்தலத்தில் வலம் வந்து வழிபட்டு சம்பந்தர் அருளிய “வாசிதீரவே காசு நல்குவீர்…” எனும் பதிகத்தை பாராயணம் செய்ய பொருள் செல்வம் மிகும் என்பது ஐதிகம்.
மீண்டும் ஒரு அற்புதமான தலத்தில் சந்திப்போம்.