மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் (cabinet shuffle) செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதனையடுத்தது, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் (cabinet shuffle) நடந்தது.
அப்போது, பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. மேலும், உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால், அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் 3வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்றுமுன்தினம் ஆளுநர் மாளிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டது. அந்த செய்தி குறிப்பில்..
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். பின்னர், அமைச்சர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி..
தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராகவும்,
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும்,
டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சராகவும்,
மு.பெ.சாமிநாதன் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராகவும்
மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், மின்சார வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக உருவாகி உள்ளது பெருமிதமாக உள்ளது என்றும், மேலும் நிர்வாக வசதிக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதுஎனவும், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டாலும், தொழில்துறையினருக்கு முழு ஆதரவை அளிப்போம் என்றும் முதலமைச்சர் உறுதிபடக் கூறினார்.