அத்தியாவசியப் பொருட்கள் பெறும் கார்டுதாரர்களை தவிர்த்து, வெளி நபர்கள் ரேஷன் கடைக்கு முன் கூட்டமாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், 21 மாநகராட்சிகளுக்கு, ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்தன.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், பண பலம் படைத்த சுயேச்சை வேட்பாளர்களும், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சியாக உள்ள திமுகவும், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக உள்ள அதிமுகவினரும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி, ரேஷன் கடைகளிலேயே பணப் பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, திமுகவினர், குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்பம்’ என்று போலியான விண்ணப்பங்களை, ரேஷன் ஊழியர்களிடம் வழங்கி, ரேசன் அட்டைதாரர்களிடம் தருமாறு கூறுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், ‘ரேஷன் கடைகளில் அரசியல் பிரமுகர்கள் புகைப்படம் உள்ள போஸ்டர்கள் அல்லது விளம்பர பலகைகளை, உடனே அகற்ற வேண்டும் என்றும், பொருட்கள் பெறும் அட்டை தாரர்களை தவிர்த்து, வெளிநபர்கள் கடைக்கு முன்பு கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்’ உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.