பழனியில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு கல்லூரி மாணவிகள் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரி முன்பு குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவத்தி ஏந்தியபடி மவுன அஞ்சலியும் செலுத்தினர். பின்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, பிபின் ராவத் அவர்களின் தேசபக்தி மற்றும் ராணுவத்தில் பணியாற்றி நாட்டிற்காக ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதே போன்று, மதுரையில் உள்ள மதுரா கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என 200க்கும் அதிகமானோர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாணவர்களுக்கு தேசப்பற்று உணர்வை வலுப்படுத்தும் விதமாகவும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதேபோல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது இதில் ஏராளமான பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.