மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது :
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த திரு. வீரமணி என்பவர் கடந்த 31-08-2023 அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருக்கும் போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் தாக்கி காயமடைந்து திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் (2-9-2023) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
உயிரிழந்த திரு.வீரமணி அவர்களின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்திரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.