இன்றைய தேர்தல் கணிப்பு நிலவத்தில் நாம் பார்க்க இருப்பது தென்மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதியான சிவகங்கை தொகுதி.
சிவகங்கை தொகுதியைப் பொறுத்தவரை, சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை,மானாமதுரை (தனி) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி என்று 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.
வீரமங்கை வேலு நாச்சியார், மருதுசகோதரர்கள் என ஆங்கிலேயருக்கு எதிராக வாள்வீசிய வரலாற்றுப் பெருமை கொண்ட வீரர்கள் வாழ்ந்த பூமி இந்த சிவகங்கைச் சீமை. ஆன்மீகத்தை எடுத்துக் கொண்டால், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், குன்றக்குடி முருகன் கோயில், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், காளையார்கோயில், காளீஸ்வரர் கோயில் எனக் கோயில்கள் நிறைந்துள்ளன. விவசாயமே இங்கு பிரதான தொழிலாக இருந்த போதும், சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலை, சிங்கம்புணரியில் கயிறு திரித்தல், எண்ணெய் உற்பத்தி, இரும்பு உதிரிபாகங்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும், மானாமதுரையில் மண்பாண்ட தொழில், செங்கல் சூளைகள் உள்ளன. மற்றப் பகுதிகளில் சொல்லும்படியான தொழில்கள் எதுவும் இல்லை. 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்களும் உள்ளன.
இந்த சிவகங்கை தொகுதியில் முக்குலத்தோர், யாதவர், தேவேந்திரர்/பறையர், முத்தரையர், செட்டியார், வல்லம்பர், மற்றும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பரவி இருக்கிறார்கள். ஆனாலும் இங்கே சாதி ரீதியில் வாக்குகள் சிதறுவதில்லை என்கிறார்கள் வாக்காளர்கள்.
கடந்த 1967ஆம் ஆண்டு முதல் தேர்தலைச் சந்தித்து வரும், சிவகங்கை தொகுதியில், 1967 மற்றும் 71 காலகட்டத்தில் மட்டுமே திமுக வெற்றியை ருசித்துள்ளது. அதன்பின்னர் காங்கிரஸ் தனியாகவும், திமுகவுடன் கூட்டணி வைத்தும் 8 முறையும், த.மா.கா 2 முறையும் அதிமுக ஒருமுறையும் வெற்றியை கைப்பிடித்துள்ளன. அதிலும் காங்கிரஸ் வேட்பாளராகவும், த.மா.கா வேட்பாளராகவும் ப.சிதம்பரம் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 2019 தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய கார்த்தி சிதம்பரம் 5 லட்சத்து 66ஆயிரத்து104 பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக கூட்டணியுடன் களம் இறங்கிய பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா 2,33,860 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.நடப்பு தேர்தலில், சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுக சார்பில், கல்லல் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரான பனங்குடி ஏ.சேவியர்தாஸ் என்னும் புதுமுகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் கிளைச் செயலாளர், ஊராட்சி செயலாளர், கூட்டுறவு சங்கத் தலைவர் போன்ற பதவிகளை சேவியர்தாஸ் வகித்துள்ளார். மஞ்சுவிரட்டு, மாட்டுவண்டி பந்தயம், வடமாடு மஞ்சுவிரட்டு,கபாடி, கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் அந்தப் பகுதிகளில் நடைபெற உதவிகள் புரிந்து இளைஞர்களை தன்வசம் ஈர்த்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. பெரிய அளவிலான தொகை ஒன்றை கட்சித் தலைமையிடம் காட்டியபிறகே சேவியர்தாஸுக்கு சீட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தேர்தல் செலவுக்கு சிக்கல்கள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இப்போதே தொகுதியில் உள்ள அதிமுக சீனியர்களையும் தேடிச் சென்று தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பா.ஜ.ககூட்டணியில் இந்த முறை இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனர் தேவநாதன் யாவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டு அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். யாதவ ஓட்டுக்களை குறிவைத்து தேவநாதன் களம் இறங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 40 ஆண்டுகளாக சிவகங்கை தொகுதி வளரவில்லை. தொடர்ந்து ஒருகுடும்பத்தின் கையில் இருக்கிறது. சரியான தொழில்வளர்ச்சி இல்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துத்தான் தனது தேர்தல் பிரசாரத்தை அவர் கையில் எடுக்க இருக்கிறார்.
Also Read : ராமநாதபுரத்தில் ஜாதிப்பாசம் எடுபடுமா..?என்ன சொல்கிறது ஓ.பி.எஸ்.சின் அரசியல் ஜாதகம்?
ஆனால் பா.ஜ.க இல்லாமல் வேறு நபருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது பா.ஜகவினருக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பா.ஜ.க மாவட்ட செயலாளராக திமுகவில் இருந்து வந்த மேப்பல் சக்திவேல் கடந்த ஜூலை 2021ல் நியமிக்கப்பட்ட பிறகு மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜுடன் சேர்ந்து 1800க்கும் மேற்பட்ட பூத்களுக்கு ஒருபூத்துக்கு 9 பேர் வீதம் ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் பெயர் விவரங்கள், ஆதார் எண்ணோடு சேர்ந்து பி.ஜே.பி. தலைவர் நட்டாவுக்கு அனுப்பி அவரை வைத்து கூட்டம்போட்டு பூத் ஏஜெண்டுகளுக்கு அசைவ விருந்தும் அளித்திருக்கிறார்கள். இப்படி கட்சியை வளர்த்து வைத்திருக்கும் நிலையில் தேவநாதன் களம் இறக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்குள் தயக்கம் நிலவிக் கொண்டிருக்கிறது. தன்னைத்தாண்டி பி.ஜே.பியில் பெரிய சக்தியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஹெச்.ராஜாவே இப்படிவிஷமம் செய்திருக்கலாம் என்றும் உள்ளூர் பா.ஜகவினருக்குள் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸைப் பொறுத்தவரை மீண்டும் கார்த்தி சிதம்பரத்தையே களம் இருக்க இருப்பதாகவே நிலவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் வாய்ப்புகொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றினாலும், டெல்லியில் லாபி செய்யும், சிதம்பரம் அதையெல்லாம் தகர்த்து மகனுக்கே சீட்டைக் கைப்பற்றி விடுவார் என்கிறார்கள். காங்கிரஸில் யார் போட்டியிட்டாலும், அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்று சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களான பெரியகருப்பனுக்கும், ரகுபதிக்கும் திமுக தலைமை கறாராகச் சொல்லி இருப்பதால், அவர்களும் இப்போதே வேலை செய்யத் தயாராகி விட்டார்களாம்.
அதிமுக வேட்பாளர் நாடாளுமன்ற தேர்தல் களத்துக்குப் புதிது. பா.ஜ.க வேட்பாளர் குறித்து கட்சிக்குள்ளேயே புகைச்சல் நிலவுகிறது. இந்த சூழலில் காங்கிரஸில் நிறுத்தப்படும் வேட்பாளர்… அது கார்த்தி சிதம்பரமாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தற்போதைய கள நிலவரம் கூறுகிறது.