ITamilTv

Tukaram : மீசை வரும் வரை காத்திருந்த படக்குழு!

Tukaram

Spread the love

1938-ம் ஆண்டு இதே நாளில் (17.09.24) வெளியான ‘துகாராம்’ படத்தின் பிரின்ட் இப்போது இல்லை என்பது சோகம். அப்படி என்ன படம் அது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

ஆரம்பகாலங்களில் தமிழ் சினிமாவில், புராணங்கள் மற்றும் பக்தி படங்கள் தான் அதிகம் எடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் அதுபோன்ற படங்களை மக்கள் அதிகம் விரும்பியது தான் அதற்கு காரணம்.

அப்படி தான் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாராஷ்டிர ஆன்மிக ஞானி ‘துகாராம்’ என்பவரின் கதையை, 1921-ல் ஷிண்டே என்பவர் மவுனப்படமாக இயக்கினார்.

துகாராம்

அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் கலாநிதி பிக்சர்ஸ் நிறுவனம் ‘சந்த் துகாராம்’ என்ற பெயரில் மற்றொரு படத்தைத் தயாரித்தது.

அதுமட்டுமில்லாமல் 1936-ல் துகாராமின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து மராத்தியில் ஒரு படமும் உருவானது. மராத்தியில் எடுக்கப்பட்ட படம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்த நிலையில், அதன் தாக்கம் தமிழ், தெலுங்கில் ‘துகாராம்’ கதையை படமாக்கத் தூண்டியது.

அதன்படி, தமிழில் இப்படத்தை கோவையை சேர்ந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் தயாரித்தது. பி.என்.ராவ் படத்தை இயக்கினார்.

அந்தக் காலகட்டத்தில், கர்நாடக இசைக் கலைஞர்களை நடிக்க வைத்து படம் எடுப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தமையால் கர்நாடக இசைப் பாடகர் ஒருவரை, துகாராமாக நடிக்க வைக்கலாம் என்று சங்கீத வித்வான் முசிறி சுப்பிரமணிய ஐயரை படக்குழு தேர்வு செய்தனர்.

ஆனால், தனது சிறந்த குரலால் அப்போது உச்சத்தில் இருந்த முசிறி சுப்பிரமணிய ஐயருக்கு நடிப்பு எளிதாக வரவில்லையாம்.

musiri subramania iyer

மேலும், இந்த படத்துக்காக அவர் மீசை வைக்க வேண்டும். ஆனால், கர்நாடக இசைக் கலைஞர்கள் அப்போது மீசை வைத்துக்கொள்ள மாட்டார்களாம். அதனால் அவருக்கு ‘ஸ்பிரிட் கம்’ மூலம் ஒட்டு மீசை வைத்துள்ளார்கள்.

ஸ்பிரிட் கம் மூலம் வைக்கும் ஒட்டு மீசையில் பசை உலர்ந்துவிட்டால் தோல் எரிந்து இழுக்கும். இது சுப்பிரமணிய ஐயருக்கு பெரும் எரிச்சலைக் கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் படப்பிடிப்பிலேயே அழுது விட்டாராம்.

இதனால் உடனடியாக ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, அவருக்கு மீசை வளரும் வரை காத்திருந்த படக்குழுவினர் மீசை வளர்ந்த பிறகுதான் மற்ற காட்சிகளைப் படம் பிடித்தார்களாம்.

சுப்பிரமணிய ஐயரோ மீசையுடன் இசைக் கச்சேரிகளுக்குச் செல்ல வெட்கப்பட்டு கொண்டு படப்பிடிப்பு முடியும் வரை கச்சேரி பக்கமே போகாமல் இருந்தாராம்.

கே.சாரங்கபாணி, ஆர்.பாலசுப்பிரமணியன், சொக்கலிங்க பாகவதர், ஆர்.பாலசரஸ்வதி, எஸ்.முருகேசன் என பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது. ஆனாலும், இந்த ஒரே படத்துடன் முசிறி சுப்பிரமணிய ஐயர் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

அதன் பின்னர் தெலுங்கில் 1973-ம் ஆண்டு உருவான ‘பக்த துகாராம்’ படத்தில் ஏ.நாகேஸ்வர ராவ் நடித்தார். இதில் சிவாஜி கணேசன், வீர சிவாஜியாக நடித்திருந்தார்.


Spread the love
Exit mobile version