தவெக வெளியிட்ட அமைச்சரவை பட்டியல் என்பது உண்மையில்லாத கற்பனை எனவும், “போகாத ஊருக்கு வழி காட்டும் முயற்சி” எனவும் அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வந்திருந்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று தனது குடும்பத்துடன் குறிஞ்சியாண்டவர் கோயில் மற்றும் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் “திராவிட மாடல் 2.0” அரசு மீண்டும் உறுதியாக அமையும் என தெரிவித்தார். மக்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே அதற்கான ஆதாரம் என்றும் அவர் கூறினார்.
சென்னை எப்போதும் திமுகவின் வலுவான கோட்டை எனவும், கடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றியே அதற்கு சான்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 2026 தேர்தலிலும் அதே போக்கே தொடரும் எனவும் கூறினார்.
வாக்குப்பதிவு அதிகரித்தது தங்களால்தான் என தவெக கூறுவது “அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்” என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது எனவும் அவர் விமர்சித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த தேர்தல்களிலும், தற்போது நடைபெற உள்ள 2026 தேர்தலுக்கும் தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, தவெக வெளியிடும் அமைச்சரவை பட்டியல் என்பது உண்மையில்லாத கற்பனை மட்டுமே என்றும், அரசியல் ரீதியாக மக்களை குழப்பும் முயற்சி என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

