பயிற்சி பெண் மருத்துவர்களை பலாத்காரம் செய்த வழக்கில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரிதிருந்த போது, சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில் பணியில் ஈடுபட, சுகாதாரத்துறை சார்பில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வரும் வெற்றிசெல்வன் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர்.
அப்போது அதே மருத்துவமனையில் பணியாற்றிய இரு பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கி வந்தனர்.
விடுதியில் தங்கி இருந்த போது மருத்துவர் வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் மற்றொரு மருத்துவரான மோகன்ராஜ் என்பவர் இன்னொரு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக இரு பெண் மருத்துவர்களும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீனிடம் புகார் அளித்ததையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த விசாகா கமிட்டி இந்த புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியது.
விசாரணையில் பாலியல் பலாத்காரம் நடந்தது உண்மை என தெரியவந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தி.நகர் காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து புகார் தொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறைக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
மகளிர் போலீசாரின் விசாரணையை அடுத்து அரசு மருத்துவர் வெற்றிசெல்வன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும், மருத்துவர் மோகன்ராஜ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வழக்குகளை பதிவு செய்த தேனாம்பேட்டை மகளிர் போலீசார், இரு மருத்துவர்களையும் கைது செய்து சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.