தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படக்கூடாது என்பதற்காகவும்,
108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகக்கூடாது என்பதற்காகவும் தான் விசிக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளதாக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்தது.
இந்த சூழலில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து ஆலோசனை நடத்தின. தொடர்ந்து நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டது.
அதன் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும் திருமாவளவன் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் ஜனநாயக சூழல் பாதிக்கப்படக்கூடாது. அரசியல் குழப்பத்தை காரணமாக்கி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது.
அதேபோல், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைப்பதற்கு விசிக தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவை எடுத்தோம்” என்று அவர் விளக்கம் அளித்தார்.
ஆட்சியில் பங்கேற்பதற்காக அல்லாமல், அரசு அமைக்க மட்டுமே வெளிப்புற ஆதரவு வழங்கப்படுவதாகவும், எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தினார்.

