மணிப்பூர் வன்முறையில் 250 பேர் கொல்லப்பட்டதையும், ₹7.5 லட்சம் கோடி ஊழல் விவகாரத்தையும் திசை திருப்ப, சனாதன நாடகத்தை பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Udhaystalin) குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி,சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு,சனாதனத்தை கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.மேலும் டெங்கு,மலேரியாவை நாம் எதிர்க்க முடியாது.அதை ஒழிக்கத்தான் முடியும். அதேபோல, சனாதனத்தையும் நாம் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று உதயநிதி பேசினார்.
இதனையடுத்து உதயநிதிஸ்டாலின் இந்து மக்களை படுகொலை செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார் என வட மாநிலங்களில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவதால்,நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல்,
ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.
மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் என்று உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.