சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை சனாதனம் பற்றிய கருத்தில் இருந்து நான் எப்போதும் பின்வாங்க போவதில்லை, என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது :
சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது . எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் . குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நீதிபதியின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது :
அம்பேத்கர், பெரியார் பேசியதை விட நான் பேசவில்லை. நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. அமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும், முதலில் மனிதனாக இருக்க வேண்டும்.
சனாதனம் பற்றிய கருத்தில் இருந்து நான் எப்போதும் பின்வாங்க போவதில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்க தயார் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.