Site icon ITamilTv

UDHAYAM THEATER முடிவுக்கு வந்தது.. உருவானது எப்படி?

UDHAYAM THEATER

UDHAYAM THEATER

Spread the love

அஸ்தமித்தது உதயம் தியேட்டர் (UDHAYAM THEATER)!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டரின் UDHAYAM THEATER பயணம் முடிவுக்கு வந்தது.

தமிழ் சினிமா தாய்முறை மாற்றங்களை சந்தித்த முக்கியமான காலகட்டத்தில் வெளியான படங்களை சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமையின் ஒருபங்கு உதயம் தியேட்டருக்கும் உண்டு.

பல்வேறு பொருளாதார சிக்கல்களின் வெளிப்பாடால் இன்று ‘அஸ்தமித்து போன உதயம் தியேட்டர்’ உதயமானது எப்படி தெரியுமா?

திருநெல்வேலியில் இருந்து வந்து சென்னையில் தானிய விற்பனையில் ஈடுபட்டிருந்த பரமசிவம் பிள்ளை,

கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஐந்து சகோதரர்கள் இணைந்து கே.கே. நகரும் அசோக் நகரும் சந்திக்கும் இடத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி, ஒருதிரையரங்கைக் கட்ட முடிவுசெய்தனர்.

அதன்படி விசாலமான வாகனநிறுத்துமிடத்துடன் 1983ஆம் ஆண்டில் உதயம் திரையரங்கம் திறக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் ஒரு திரையரங்கில் காலைக் காட்சியாக ஒரு திரைப்படமும் மீதமுள்ள மூன்று காட்சிகள் வேறு ஒரு திரைப்படமும் வெளியாகும்.

அப்படி முதல் இரண்டு படங்களாக கமல், மாதவி நடித்து கே. விஜயன் இயக்கிய சட்டம் திரைப்படமும் ரஜினிகாந்த், சரிதா, ராதா நடித்து முக்தா ஸ்ரீநிவாஸன் இயக்கிய சிவப்பு சூரியன் திரைப்படமும் வெளியானது. இரண்டுமே பெரிய ஹிட்.

இதனை தொடர்ந்து வளர்ச்சி முகம் தான். அடுத்தடுத்த ஆண்டுகளில் சூரியன், சந்திரன் ஆகிய இரு திரையரங்குகள் கூடுதலாகத் திறக்கப்பட்டன.

1987ஆம் ஆண்டில் உதயம் திரையரங்கின் பால்கனி பகுதி மறைக்கப்பட்டு தனி திரையரங்காக்கப்பட்டது. இதற்கு மினி உதயம் எனபெயர் சூட்டப்பட்டது.

அத்தருணம் தொட்டு 4திரையரங்குகளுடன் உதயம் காம்ப்ளக்ஸ் ஆக சென்னையின் அடையாளங்களுள் ஒன்றானது.

சினிமா திரையரங்குகள் தனி அந்தஸ்தைப் பெற்றிருந்த அந்தக் காலகட்டத்தில், உதயம் காம்ப்ளக்ஸிற்கு என தனி இடம் உண்டானது.

ரஜினிகாந்த், சிவாஜி நடித்த விடுதலை திரைப்படம், இந்தத் திரையரங்கில் திரையிடப்பட்ட போது முதல் நாள் வசூல் மட்டும் 10 லட்ச ரூபாயைத் தொட்டது. அந்தக் காலகட்டத்தில் அது மிகப் பெரிய தொகை.

ஆனால், 2000களின் பிற்பகுதியில் திரையரங்குகள் மீதான ஆர்வம் குறையத் துவங்கியபோது இந்தத் திரையரங்கும் பின்தங்க ஆரம்பித்தது. அதன் பிறகு அவ்வப்போது சில சமயங்களில் கூட்டம் அலைமோதினாலும் அதுநீடித்த ஒன்றாக மாறவில்லை.

இந்நிலையில் கட்டுமான நிறுவனம் ஒன்று அந்த இடத்தை வாங்கியுள்ளதாகவும் அங்கு குடியிருப்பு வளாகம் கட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம், உதயம் திரையரங்கை விற்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல. அதுபோல ஒரு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

எதுவும் முடிவாகவில்லை. அதற்குள் திரையரங்கை விற்றுவிட்டதாகவும் இடிக்கப் போவதாகவும் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

உண்மையில், இந்தத் தருணம் வரை அதாவது பிப்ரவரி 17 வரை இதுபோல எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என திரையரங்கு உரிமையாளர்களில் ஒருவரான சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 1983-ம் ஆண்டு முதல் 41 வருடங்களாக செயல்பட்டு வந்த, உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என நான்கு திரையரங்குகளைக் கொண்ட உதயம் காம்ப்ளக்ஸ் அதன் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

உதயம் காம்ப்ளக்ஸ் இனி நினைவுகளாக மட்டுமே பலரது மனதில் உதயமாகும்.


Spread the love
Exit mobile version