இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை அமைச்சர் அமித்ஷா(AmitShah)பொழிந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று இந்தி தினமான ‘இந்தி திவாஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த இந்தி நிவாஸ் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்துள்ள பேட்டியில், இந்தியா பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒன்றிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது.
சுதந்திரப் போராட்டத்தின் கடினமான நாட்களில் நாட்டை ஒன்றிணைப்பதில் இந்தி மொழி முன்னோடியில்லாத பங்கைக் கொண்டுள்ளது என்றும், பல மொழிகளுக்கு இடையே ஒற்றுமை உணர்வைத் இந்தி தூண்டியது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில்,
“இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது – பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது” என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.
தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?
நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.