வேகமெடுக்கும் ஒமைக்ரான்”… 27 மாவட்டங்களுக்கு தீவிர கண்காணிப்பு..! – மத்திய சுகாதாரத்துறை செயலர் அவசர உத்தரவு..!

கொரோனா அதிவேகமாக பரவும் 27 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வந்த நிலையில், டெல்டா, ஆல்பா போன்று உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

இதனால், பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கு பிறப்பித்திருப்பதுடன், சர்வதேச விமானங்களுக்கும் தடை விதித்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாடுகளுடனான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 27 மாவட்டங்களின் முதன்மை செயலாளர்கள், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினருக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று அதிகம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, மக்கள் கூடுவதற்கு தடை, திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு கூட்டம் கூடுதல் ஆகியவற்றில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்பதும் அரசு அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜிம்பாப்வேயில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

அவரது பயண ஆவணங்களை பரிசோதித்ததில் அவர் தென்னாப்பிரிக்கா சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இத்துடன் சேர்த்து இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 33 ஆக உயர்ந்துள்ளது.

Total
0
Shares
Related Posts