உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு தழுவிய அளவில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் பேரணியின் போது கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
இது ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் திட்டமிட்ட செயல். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதனிடையே ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும் அஜய் மிஸ்ரா ஒன்றிய அமைச்சர் பதவியிலேயே நீடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு தழுவிய அளவில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஹரியானா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகளவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தனது மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் அதிகமாக கூடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் உ.பி. தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், லக்னோவில் விவசாய சங்க தலைவர், நிர்வாகிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.