ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிட போவதாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ல் நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
Also Read : நடிகை கமலா காமேஷ் காலமானார்..!!
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இம்முறை யார் போட்டியிட போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிட போவதாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார் என திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.