விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கண்டமங்கலம் அருகே ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட விசிகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவர் அத்துமீறி நுழைந்து கலர் புகைக்குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது அவையை நடத்தவிடாமல் இடையூறு செய்வதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த கனிமொழி, ஜோதிமணி, திருமாவளவன் உள்ளிட்ட எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன பாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் புதுச்சேரி – விழுப்புரம் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விசிகவினரை கைது செய்தனர். விசிகவினர் போராட்டத்தால் ரயில் தாமதமாக புறப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்