தமிழக அரசியல் சூழலில் தவெக ஆதரவு கோரி பல்வேறு கட்சிகளை சந்தித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.
இதற்கு முன்பு, தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார்.
ஆனால், பெரும்பான்மையை உறுதிப்படுத்த தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தொடர்பான முழு விவரம் இல்லாததால் ஆளுநர் தரப்பில் கூடுதல் விளக்கம் கேட்கப்பட்டது.
இதனால் பதவியேற்பு நடவடிக்கை தற்காலிகமாக தாமதமாகியுள்ளது.
இதையடுத்து தவெக சார்பில் மீண்டும் ஆளுநரை சந்தித்து விளக்கம் வழங்கப்பட்டது.
இருப்பினும், இன்னும் ஆறு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் திமுக கூட்டணி தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு திருமாவளவன் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனை நடந்ததாகவும் கூறினார்.
தவெக ஆதரவு குறித்து கட்சிக்குள் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் 118 எம்எல்ஏக்கள் விவரம் கேட்பது சட்டரீதியாக சரியா என்பது சந்தேகத்திற்குரியது என்றும், இதன் பின்னணியில் அரசியல் குழப்பம் உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது என்றும் அவர் கூறினார்.

