Veerasikamani Kudaivara temple : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரசிகாமணி என்ற சிற்றூரின் அருகே அமைந்துள்ளது வரலாற்று புராதன சின்னம் கொண்ட குடைவரை கோயில்.
இக்கோவிலைப் பற்றி வரலாற்று ஆய்வு கட்டுரைகளுடன் ஒப்பிட்டு பேச வேண்டுமானால் பல மணி நேரம் பேசும் அளவிற்கு தரவுகள் இருப்பினும், ஐ தமிழ் ஆன்மீக சேனல் சார்பாக சுருக்கமாக ஆன்மீக தகவல்களுடன் ஒப்பிட்டு பேசுவதே சிறப்படையது என்று கருதுகிறோம்.
சேர்ந்த மரம் என்ற ஊருக்கு அருகில் உள்ள வீரசிகாமணி கிராமத்திற்கு வெளியே அமைந்துள்ள நீளமான குன்றில் அமையப் பெற்றுள்ளது இக்குடைவரை கோயில். கிபி 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சற்று ஏறக்குறைய பல்லவ மன்னர்களின் இறுதி காலத்தில் குடைவரை செய்யப்பட்டுள்ளதாக கருதலாம் (Veerasikamani Kudaivara temple).
பொதுவாக மாமல்லபுரம், திருமலாபுரம், கழுகுமலை, வெட்டுவாங்கோவில், சித்தன்னவாசல், மண்டகப்பட்டு போன்ற எத்தனையோ குடைவரை சிற்ப கோவில்கள் இருப்பினும், பல்லவர்களைப் போல் பாண்டிய மன்னர்களும் தாங்கள் அரசாட்சி செய்த பகுதியில் குடைவரை சிற்பங்கள் செய்துள்ளதாக அறிய முடிகிறது.
இவ்வேளையில் பிற்கால சோழர்கள் இப்பகுதியில் மண்டலாதிபதிகளாக பாண்டிய நாட்டில் பொறுப்பேற்று இக்கோவிலில் தங்களால் இயன்ற பணிகளை செய்துள்ளதாகவும் வட்டெழுத்து கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
வீரசிகாமணி என்பது தில்லை நடராஜ பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த முதலாம் பராந்தக சோழனது விருது பெயராகும்.இவனுக்கு கோப்பரகேசரி என்று மாற்று பெயரும் உண்டு. மிகப்பெரும் சிவபக்தனான விளங்கியவர்.
ஆக, வரலாற்று விவாதங்களுக்கு செல்லாமல் கோவிலை எழுப்பியவர்கள் சோழர்களாயினும், பாண்டியர்களாயினும் அல்லது பல்லவர்களாக இருந்தாலும் இவர்களது நோக்கம் இறைநம்பிக்கை சார்ந்த சமயப்பணியே என்பது மனா நிறைவை தரும் விஷயமாக நாம் பார்க்க வேண்டும்.
நாம் இப்போது கோவிலுக்குள் செல்வோம்…
இத்தல இறைவனுக்கு, கைலாச நாதர் என்ற திரு நாமம் கொண்டு விளங்குகிறார். குடைவரையில் உள்ள பெருமானும் நேராக இருக்க வேண்டும் என்பதற்காக நந்தி எம்பெருமானுக்கு முன்புற மண்டபம் எழுப்பப்பட்டு காட்சியளிக்கிறார்.
முன் மண்டபத்தில் வெளியே உள்ள பாறை குன்றின் இடது புறத்தில் விநாயகர் சிலையும், வலது புறத்தில் சக்திதரர் என வடிவம் கொண்ட முருகன் சிலையும் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வலதுபுறத்தில் உள்ளது கால சிதைவின் காரணத்தால் முருகனா அல்லது திருமாலா என்று திருப்பதி போன்று இருவித கருத்து நிலவுகிறது.
முன்மண்டபத்து கருவறை வாசலில் துவார பாலகர் சிலைகளும் அதையொட்டி அடையாளம் காணமுடியாத முனிவர்கள் சிலைகளும் காணப்படுகிறது.
தமிழ் ஆராச்சி நூல்களை மேற்கோள் காட்டி விளக்கினால் இந்த ஐந்து சிலைகளும் பஞ்ச பாண்டவர்கள் சிலை என்றும், இந்த மலைக்கு பாண்டவமாலை என்று பெயரிட்டு அழைத்ததாகவும், முன்னொரு காலத்தில் புத்த துறவிகளும், சமண துறவிகளும் இங்கு தங்க சென்றதாகவும் வரலாறு உள்ளது.
மலையின் மேல்புறத்தில் சமணர் படுக்கைகளும், தெளிவற்ற நிலையில் கல்வெட்டுகளும் காணப்படுகிறது.
நாம் இப்போது மலையின் மேல் பகுதிக்கு செல்வோம்….
மலையில் மேல் பகுதியில் தனியாக நிற்கும் இந்த ஒற்றை உருண்டை பாறையும், சமணர் படுக்கைகளும் மட்டுமின்றி நாம் காண்பது மகா யோகி பாம்பாட்டி சித்தரின் குகைப்பகுதி. இப்பகுதியில் சில காலம் தங்கி யோக நிலையில் இருந்ததாக கதைகள் உண்டு.
இக்கதைகளுடன் ஒத்துப்போகும் அளவிற்கு முக்கிய காரணம் எதுவென்றால் மருதமலையில் அதிக காலம் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்து இருந்தாலும் அவரது இறுதி காலத்தில் இந்த வீரசிகாமணி மலைக்கு அருகில் உள்ள புளியங்குடி அருகே தான் அவரது ஜீவ ஒடுக்கம் அடைந்தார் என்பது வரலாறு.
இதன் பழம்பெருமை அறிந்ததால் மன்னராட்சி காலத்தில் இவ்விடத்தில் குகை கோவில் எழுப்பி கைலாச நாதர் என பெயரிட்டு வழிபட்டிருக்கலாம். மேலும், கைலாசநாத பெருமான் என்று அழைக்கப்படும் லிங்க மூர்த்தமானது வெளியில் இருந்து செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க மூர்த்தம் கிடையாது. தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்ட வடிவமாக உள்ளது.
மேலும், எந்த கோவிலிலும் இல்லாத வகையில், இரண்டு மரங்கள் ஸ்தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது. ஒன்று வில்வ மரம், மற்றொன்று திரு பராய் மரம்.
வில்வ மரத்தின் பயன்கள் சொல்லில் அடங்காது. அதுபோலவே, பராய் மரத்தின் பயன்களும் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இம்மரத்திற்கு உண்டு என பலரும் கூறுவதோடு, இரண்டும் இணைந்த இத்தலத்தில் இவ்விரு விருட்சங்களை பிரதோஷ வேளைகளில் வழிபாடும் போது நோயுற்றவர்களும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகளும் தங்கள் மனக்குறைகள் நீங்க பெறுவர் என ஜோதிடம் அறிந்த பெருமக்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறான இவ்வாலய சிறப்புகளை கண்ட ஐ தமிழ் சேனல் நேயர்கள் சுற்றுலாத்தலமாக கருதாமல் இவ்வாலயத்தை வணங்கி மகா யோகி பாம்பாட்டி சித்தரின் அருள் பெற்றும், கைலாசநாதரின் திருவருள் பெற்றும் இன்புற்று வாழ ஐ தமிழ் ஆன்மீக சேனல் சார்பாக உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மீண்டும் ஓர் அற்புத ஆலய தரிசனத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் ஐ தமிழ்..