கோவையில் லியோ(leo) வேட்டைக்கும் ரெடி,கோட்டைக்கும் ரெடி என்று விஜய் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா நடித்திருக்கும் லியோ படமானது நாளை உலகெங்கிலும் வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் பூஜையில் தொடங்கி ட்ரெய்லர் வரை அனைத்து அப்டேட்களையும் ஒன்றின் பின் ஒன்றாக லியோ படக்குழு கொடுத்து வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் மாஸ்டர் படத்திற்கு பின், லோகேஷ் கனகராஜ் – விஜய் காம்போ மீண்டும் இணையவுள்ளது என்ற தகவல் வந்த நாள் முதல் அனைவரும் லியோ படத்தை பார்க்க ஆவலாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளைக்கு திரைக்கு வரவுள்ள லியோ படத்தை வரவேற்கும் வகையில் கோவை நகரப் பகுதி முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான பேனர்கள் மற்றும் கட்டவுட்டுகளை வைத்து ரசிகர்கள் அசத்தியுள்ளனர்.
அந்த போஸ்டரில் தமிழக சட்டப்பேரவை புகைபடம் மற்றும் நடிகர் விஜய் படத்தை இணைத்து லியோ வேட்டைக்கும் ரெடி, கோட்டைக்கும் ரெடி என்ற வாசகங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர்.தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.