பெண்கள் 8ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்! – புதின் வலியுறுத்தல்!

Spread the love

ரஷிய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.

ரஷியாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990-ல் இருந்து குறைந்து வருகிறது. ரஷியாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் 1-ந்தேதி கணக்கின்படி 14 கோடியே 64 லட்சத்து 47 ஆயிரத்து 424 ஆக உள்ளது. 1999-ம் ஆண்டு புதின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாக உள்ளது.

அது மட்டும் இன்றி உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ரஷிய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.

இதை நடைமுறையாக்க வேண்டும் என்றும் அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷியாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூறிய புதின் “நம்முடைய பல இனத்தினர் 4,5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களை கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர்.

நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் 7, 8க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர். இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம்.

ரஷ்யாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Spread the love
Related Posts