“மதவாதிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, அதிகார வெறி பிடித்தவர்களுக்கு பாடம் புகட்டக் கூடிய திரைப்படம்” என ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை தொல்.திருமாவளவன்(thirumavalavan) பாராட்டியுள்ளார்.
இயக்குநர் சை கௌதம்ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப் நடிப்பில் கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ப்ரிவியூ திரையரங்கில் பார்த்தார்.
இந்த திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதில் கழுவேத்தி மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன்.
நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகாரவெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம் கற்பிப்பவன். சட்டம்-ஒழுங்கு எனும் பெயரால் எப்போதுமே ஆதிக்க வெறியர்களைக் பாதுகாக்கும் காக்கி அதிகாரிகளால் களப்பலி ஆனவன்.
‘பிறப்பொக்கும்’ என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியை பெருங்குரலெடுத்துப் பேசுபவன்.இயக்குநர் கௌதமராஜூக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.
இன்றைக்கு தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம் என தெரிவித்துள்ளார்.