நடிகர் பிருத்விராஜ் வயநாடு பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரு.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பெரும் நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவும் வகையிலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையிலும், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது – பின்னணி இதுதானா?
அந்த வகையில், தற்போது நடிகர் பிருத்விராஜ் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்து உள்ளார்.
முன்னதாக, வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், மோகன்லால் ரூ.25 லட்சம் மற்றும் தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை சார்பில் ரூ.3 கோடி,
அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம், சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் இணைந்து ரூ.1 கோடி, நடிகர் மம்மூட்டி, துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், என பலர் நன்கொடை வழங்கியுள்ளனர்.
அதேபோல, நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி ஆகியோர் முதல்வர் பினராயி விஜயனிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நேரில் சென்று வழங்கினர்.
மேலும், பாலிவுட் நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி, தனுஷ் ரூ.25 லட்சம் என நிவாரண நிதியாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.