நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச் சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Also Read : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி..!!
இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.